நாட்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 35,228 ஆக உயர்வு!
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
‘தெரண பிக் ஃபோகஸ்’ (Derana Big Focus) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரையான அதிகரிப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே பெரும்பாலானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் குறிப்பிடத்தக்க அளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
‘டித்வா’ புயலால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வானிலை மாற்றங்களும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வருடத்தின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் அடங்குவதுடன், ஏனையோர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் 29 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
