காதலனால் கடத்தப்பட்டு பதின்மவயது சிறுமி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் – 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு!
காதல் தொடர்பை பயன்படுத்தி வீட்டிலிருந்த 16 வயது சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மறுநாள் வியாழக்கிழமை (04) பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை (05) சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
விசாரணைகளின்படி, இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்முனை மாநகரப் பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு தாயாருடன் சென்றிருந்த சிறுமிக்கும் அங்கு பணியாற்றிய இளைஞனுக்கும் இடையே காதல் தொடர்பு உருவாகியுள்ளது. பின்னர் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு 11:30 மணியளவில், சந்தேகநபர் வாடகை வேன் ஒன்றில், தனது கடை பணியாளர் என கூறப்படும் 56 வயதுடைய நபரையும் அழைத்துக் கொண்டு சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை தொலைபேசியில் அழைத்து பலவந்தமாக வேனில் ஏற்றி அம்பாறை மத்திய முகாம் பகுதிக்குக் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பாழடைந்த கட்டடம் ஒன்றில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
பின்னர் பேருந்து உதவியுடன் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சிறுமி முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, 25 வயது முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு 56 வயது சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில் பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தால் மன அழுத்தமடைந்த சிறுமியின் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
