அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!
இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின் உறுப்பினர்களும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மத்திய கிழக்கில் விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக இலங்கை தனிநாடாகவும், சர்வதேச சமூகத்துடன் இணைந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
போரில் நேரடியாக ஈடுபடாத மத்திய கிழக்கு நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வெளியிட்டார்.
இதேவேளை, இலங்கையின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைகளில் அரபு நாடுகள் வழங்கி வரும் பங்களிப்பிற்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
போர்ச் சூழ்நிலையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தந்த அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி பாராட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமானது என்பதை இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
