ஈரான் விவகாரம்: டொனால்ட் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்குமாறு வலுப்பெறும் கோரிக்கை!


ஈரான் தொடர்பான பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

இதற்காக, அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தை (25th Amendment) பயன்படுத்த வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் படி, ஒரு ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலையில் இருந்தால், துணை ஜனாதிபதி தற்காலிகமாக அந்த பொறுப்புகளை ஏற்க இந்த சட்டம் அனுமதிக்கிறது. குறிப்பாக, அதன் 4-வது பிரிவின் கீழ், ஜனாதிபதி தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளாத சூழலில், துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மையினரும் இணைந்து, அவரை தகுதியற்றவர் என அறிவிக்க முடியும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இனப்படுகொலைக்கு இணையான போர் குற்றங்களை மேற்கொள்ளத் தயார்” என அச்சுறுத்துகிறார் என்றும், “அணு ஆயுதக் குறியீடுகளை வைத்திருப்பதற்கு அவர் ஆபத்தானவர்” என்றும் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முக்கியமாக, காங்கிரஸ் உறுப்பினர் Alexandria Ocasio-Cortez (AOC), சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஒரு இனப்படுகொலை அச்சுறுத்தல். எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் மனநிலை நிலைதடுமாறியுள்ளது; அவரை நம்ப முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் நாட்டை மூன்றாம் உலகப்போருக்குள் தள்ளுவதற்கு முன், மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் இந்த “ஆபத்தான போரை” தடுக்க, குடியரசுக் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என மூத்த ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் “மனநிலை சீர்குலைந்தவை” (Unhinged) எனவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், துணை ஜனாதிபதி J. D. Vance அல்லது அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் இதுவரை இத்தகைய நடவடிக்கைக்கு முன்வந்ததாக எந்த அறிகுறிகளும் இல்லை.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை தற்போது விடுமுறையில் உள்ள நிலையில், அது மீண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.