நிலக்கரி மோசடியே மின்சார நெருக்கடிக்கு காரணம்? அரசாங்கம் மீது புதிய குற்றச்சாட்டு


தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருக்க வலுசக்தி அமைச்சர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த அமைச்சர் ஐந்து நாட்களுக்கும் மேலாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தங்கியிருந்து சதித்திட்டங்களை தீட்டி வருவதாகவும் கூறினார்.

“நிலக்கரி மோசடி என்பது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும். இந்த மோசடியின் காரணமாக நாட்டில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புத்தாண்டு காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த ஜெனரேட்டர்களுக்குத் தேவையான எரிபொருளையும் அரசாங்கமே வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், நிலக்கரி மோசடியை மறைக்க முயற்சியாக மின்சாரக் கட்டணச் சுமையை மக்கள்மீது ஏற்றியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நுரைச்சோலை மின் நிலையம் தொடர்பான முதல் அறிக்கை ஜனவரி 2ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த போதிலும், மூன்று மாதங்கள் கடந்த பின்னரே அமைச்சர் அங்கு சென்றதாகவும் அவர் கூறினார். அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னரே அமைச்சர் தற்போது அங்கு தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது நெருங்கிய ஒருவரை பயன்படுத்தி இந்த மோசடியை மறைக்க முயற்சி செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அறிக்கைகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் டி.வி. சாணக்க குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், அரசாங்கம் தற்போது ஊழல் நடைபெற்றுள்ளதாக ஒப்புக்கொள்ள முயற்சித்தாலும், அதன் பொறுப்பை தங்கள்மீது ஏற்காமல் தவிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணையும் நிலை உருவாகி வருவதாகவும், கூட்டணிகள் அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.