மீண்டும் 15% உயரப்போகும் மின் கட்டணம் ; பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!


தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களை கருத்தில் கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவை ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ (National System Operator Pvt Ltd) நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியை முன்னிட்டு சமர்ப்பித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க PUCSL அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் 15 சதவீத உயர்வு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள PUCSL நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், குறித்த முன்மொழிவை ஆணைக்குழு விரிவாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மின் உற்பத்திக்கான உண்மையான செலவினங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கட்டண உயர்வின் அவசியம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இதற்கான இறுதி தீர்மானம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இரண்டாம் காலாண்டில் மின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவதால், இந்த கட்டண உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவு அனுமதிக்கப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட 10 சதவீத உயர்வுடன் இணைந்து, நுகர்வோருக்கு மேலதிக பொருளாதார சுமை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.