தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்!


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால், எதிர்வரும் மே மாதத்தில் பொதுமக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால், எரிபொருள் பயன்பாட்டை மக்கள் தாமாகவே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் நோக்கில், நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போதைய எரிபொருள் விலை உயர்வின்போதும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் அரசாங்கம் சலுகை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன், கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்புச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இதனால், இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

எதிர்காலத்தில் நிலைமை எவ்வாறு மாறும் என்பது குறித்து துல்லியமாக முன்னறிவிக்க முடியாது என்றும், அடிக்கடி விலை உயர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலைமை ஓரளவு சீராகும் என்பதே எமது நம்பிக்கை. ஒருவேளை அவ்வாறு சீராகாவிட்டால், மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான விலை அதிகரிப்பைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.