இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஏற்றுமதியாளர்களுக்கு விசேட சலுகை! - ஜனாதிபதி அறிவிப்பு!


இலங்கையின் ஏற்றுமதித் துறையை பாதுகாக்கவும், தற்போதைய சவால்களை சமாளிக்கவும் அரசு முழுமையான தலையீட்டை மேற்கொள்ளும் என அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக உலகளாவிய வர்த்தகப் பாதைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையின் ஏற்றுமதித் துறையையும் நேரடியாகச் சவால்களுக்கு உள்ளாக்கியுள்ளன. குறிப்பாக உற்பத்தி செலவுகள் உயர்வு, போக்குவரத்து தடைகள் மற்றும் சந்தை நிலைத்தன்மையின்மை போன்ற காரணிகள் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை முன்னிட்டு, நாட்டின் முக்கிய ஏற்றுமதியாளர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, ஏற்றுமதித் துறையினரால் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக எரிபொருள் கிடைப்புத் தட்டுப்பாடு சுட்டிக்காட்டப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எரிபொருள் விநியோகம் சீராக இல்லாதது பெரும் தடையாக உள்ளதாக அவர்கள் வலியுறுத்தினர்.

இதனை கருத்தில் கொண்டு, தேசிய பொருளாதாரத்தில் ஏற்றுமதித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் துறைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டங்களை அமல்படுத்துவதற்கான அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். அதேவேளை, வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்கும் முக்கிய துறையாக இருப்பதால், ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கி, அவர்களின் செயல்திறனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஏற்றுமதியாளர்கள் முன்வைத்த கருத்துகள், சிக்கல்கள் மற்றும் தீர்வு முன்மொழிவுகள் அனைத்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு விரைவான நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

தற்போதைய உலகளாவிய சவால்களை முன்னிட்டு, இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் இந்த முயற்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.