பாணந்துறை கடற்பரப்பில் உதவி கோரும் மற்றுமொரு ஈரான் கப்பல்; 300 சிறுவர்கள் உள்ளதாக தகவல்!


பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் (EEZ) மற்றுமொரு ஈரானியக் கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கப்பலில் சுமார் 300 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீர் மற்றும் உணவைப் பெற்றுக்கொள்ள 24 மணிநேரத்திற்கு இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானின் ஒரு போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்ததாக கூறப்படும் சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் மற்றுமொரு கப்பல் அவசர உதவி கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த கோரிக்கையை இலங்கை பாதுகாப்பு அமைச்சு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நிலைகொண்டுள்ள ஈரானியக் கப்பல் அவசரமாக துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ள நிலையில், அதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது “X” சமூக வலைத்தளப் பதிவில் அவர், தற்போதைய சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த ஈரானியக் கப்பல் தற்போது இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்கு (Territorial Waters) வெளியே நிலைகொண்டுள்ளதாகவும், துறைமுகத்திற்குள் நுழைய அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.