CID-யின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் ரணில் தரப்பு; மைத்திரிக்கு FCID அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்கும் பொருட்டு, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவரை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரிட்டனுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்திற்காக 16.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிதி முறைகேடு விவகாரத்தில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்குமே மைத்ரி விக்கிரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
