விவாகரத்து மனு ; த.வெ.க. தலைவர் விஜய் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் மனைவி சங்கீதா!


நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளமை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகையுடனான திருமணத்திற்கு மீறிய தொடர்பே விவகாரத்துக்கு காரணம் என சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

"நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரல் மாதத்தில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமின்றி அந்த உறவைத் தொடர்ந்தார். இது வலியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை.

திருமணத்தை மீறிய அந்த உறவைத் தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் விதித்தார். சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார். விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்.

விஜயின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன். விஜயின் சமூக அந்தஸ்தும் வருமானமும் கருத்தில் கொண்டு எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜயின் பொதுவெளி பிம்பத்தைக் கருதி நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன். பேச்சுவார்த்தை நடத்த இருமுறை முயற்சி மேற்கொண்டாலும் அது தோல்வியில் முடிந்தது" என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் மனு விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த விஜயை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சிலர் பெரிதுபடுத்தி சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றும் விஜய் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.