மரண தண்டனை தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது! அமைச்சர் நளிந்த
இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவை மட்டத்தில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இதுபோன்ற பாரதூரமான விடயம் குறித்து அமைச்சரவை மாத்திரம் தனித்து முடிவெடுக்க முடியாது என்றும், இது தொடர்பில் பொதுமக்களிடையே பரந்தளவிலான கலந்துரையாடல்கள் அவசியமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மரண தண்டனை அமுலில் உள்ள நாடுகளில் குற்ற வீதங்கள் குறைந்துள்ளனவா என்பது குறித்தும், சமூகவியல், உளவியல் மற்றும் குற்றவியல் ரீதியான தாக்கங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்த பின்னரே கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி
