அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க,
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகள் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் (மண்சரிவு, வெள்ளம், சூறாவளி முதலியன) காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள்,
2025.11.26 முதல் 2025.12.31 வரை ஏற்பட்ட சம்பவங்களுக்கான இழப்பீட்டு கோரிக்கைகள் மட்டுமே இங்கு பரிசீலிக்கப்படும்.
வழங்கப்படும் விசேட சலுகைகள்:
1. பெற்றோரை இழந்த மாணவர்கள்:
இயற்கை அனர்த்தம் காரணமாக பெற்றோரை அல்லது சட்டரீதியான பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கு, வருமான எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் காப்புறுதி நன்மைகள் வழங்கப்படும்.
(இதற்காக, அனர்த்தத்தால் பெற்றோர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
2. வெளிவாரி சிகிச்சைக்கான சலுகை:
காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாதிருந்தாலும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளுக்காக பெற்ற நேரடி சிகிச்சை, மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்காக ரூ. 20,000.00 வரை வெளிவாரி சிகிச்சை நன்மைகள் வழங்கப்படும்.
3. ஆவணங்கள் சேதமடைந்திருந்தால்:
2025.11.01 முதல் 2025.11.26 வரை ஏற்பட்ட சம்பவங்களுக்கான காப்புறுதி ஆவணங்கள் அனர்த்தத்தால் சேதமடைந்திருந்தால், பாடசாலை அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் அடிப்படையில் நன்மைகள் பெற முடியும்.
-
தனியார் வைத்தியசாலை:
பற்றுச்சீட்டுகள் சேதமடைந்திருந்தால், சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அல்லது நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். -
அரசு வைத்தியசாலை:
சிகிச்சை விபரத் துண்டுகள் (Diagnosis Card) சேதமடைந்திருந்தால், நோயாளி விவரங்கள் அடங்கிய மருத்துவப் பரிந்துரைக் கடிதம் வைத்தியசாலையால் வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4. கால அவகாசம் நீடிப்பு:
அனர்த்தம் காரணமாக விண்ணப்பங்களை காலத்திற்குள் சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு, தற்போதுள்ள 90 நாட்கள் கால அவகாசத்துடன் மேலதிகமாக 60 நாட்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
(இச் சலுகை 2025.11.01 முதல் 2025.12.31 வரையிலான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)
ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களை இன்சூரன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத பட்சத்தில், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை கோருவதற்கு நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு.
