மலையகத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பகுதிக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்வடைதல், நீரூற்றுகள் திடீரென வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவு தொடர்பான ஏதேனும் அவசர அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையோ அல்லது அந்தந்தப் பகுதியின் கிராம உத்தியோகத்தரையோ தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீரற்ற வானிலை தொடரக்கூடும் என்பதால், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
