ஐ.நாவுடன் ஆக்கபூர்வமாக இணைய இலங்கை தயார்! மார்க் ஆண்ட்ரேவிடம் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவிப்பு!


இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே பிரான்ச், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தமாகச்  சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக பின்வரும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடலில் இடம்பெற்றன.

நாட்டின் முன்னுரிமைக்குரிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்.

தற்போதைய பொருளாதார சவால்களை முறியடிப்பதற்கான முயற்சிகள் மற்றும் அதற்குரிய ஒத்துழைப்புகள்.

அரச நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துதல்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள்.

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பேணுவதில் இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதி அமைச்சர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார். 

பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளுடனான நீண்டகால பங்காளித்துவத்தை இலங்கை உயர்வாக மதிக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மீளெழும் திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை நோக்கிய பயணத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் இச்சந்திப்பின் முடிவில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கூறினார்.