இலங்கையின் வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்!


நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலையில், நாளை (பெப்ரவரி 12) முதல் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை நேரங்களில் பனிமூட்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வழியாக மட்டக்களப்பு வரை உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும். வடகிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரை உள்ள கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45–50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால், மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.