புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபுக்கு மனோ கணேசன் கடும் கண்டனம்!


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA) முழுமையாக நீக்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை கொண்டுவர முயற்சிப்பது பெரிய ஒழுக்க மீறல் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு வழங்கிய சிறப்பு குரல் பதிவில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து வேறுபட்டதல்ல என்ற பொதுக் கருத்துடன் தாம் உடன்படுவதாகவும், அதன் உள்ளடக்கத்தை விட அரசியல் ஒழுக்கம் மீறப்பட்டிருப்பதே முக்கிய பிரச்சினை எனவும் அவர் கூறினார்.

முன்னாள் ஆட்சியாளர்களிலிருந்து தாம் மாறுபட்டவர் என்றும் மக்களின் உண்மையான நண்பர் என்றும் கூறியே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று அதே அடக்குமுறை சட்டங்களை வேறு வடிவில் கொண்டு வருவது மக்களுக்கும் அவருக்கு வாக்களித்த அனைத்து சமூகங்களுக்கும் துரோகம் என அவர் குற்றம் சாட்டினார்.

1978ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் பல தசாப்தங்களாக கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் பலர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், காணாமல் போனார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இச்சட்டம் குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்தபோது மௌனமாக இருந்த பலரும், அரகலய போராட்டத்தின் போது அதன் விளைவுகளை உணர்ந்தனர். அப்போது பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்களில் தற்போதைய ஆட்சித் தலைவரும் இருந்தார் என்று அவர் நினைவூட்டினார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்த பின்னர் மாற்றுச் சட்டம் கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனநாயகத்தை பாதுகாப்பதே அரசின் கடமை என மனோ கணேசன் வலியுறுத்தினார்.