யாழ். துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி விசாரணை!


யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர், நேற்றைய தினம் சம்பவ இடத்துக்குச் சென்று களநிலவரங்களை ஆய்வு செய்துள்ளனர். இதன்போது, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடமிருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும், சம்பவ நேரத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமிருந்தும், உயிரிழந்த சிறுவனின் உறவினர்களிடமிருந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.