முச்சக்கரவண்டி சாரதியை கொடூரமாக கொன்ற 16 வயது சிறுவன்!


வாடகை சவாரிக்குச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் ரத்மல்யாய பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரத்மல்யாய 4ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆதம் பாவா அப்துல் லதீப் (வயது சுமார் 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபரொருவர் வாடகை சவாரிக்காக அழைத்ததையடுத்து, அவர் வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியில் புறப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் கடந்தும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்காத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, புத்தளம் பொலிஸில் முறைப்பாடும் செய்தனர்.

அடுத்த நாள் காலை ரத்மல்யாய – அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வாய்க்காலில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அது காணாமல் போன முச்சக்கர வண்டி சாரதி என்பதைக் உறுதிப்படுத்தினர். சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அவரது முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பதில் நீதவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டார். தொடர்ந்த விசாரணைகளின் அடிப்படையில் தில்அடிய – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியை கொள்ளையிடும் நோக்கில் சாரதியை தாக்கி கொலை செய்ததாகவும், போதைப்பொருள் பழக்கத்திற்கும் பணத் தேவைக்கும் காரணமாக இந்தக் குற்றத்தை செய்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்குப் பின்னர் முச்சக்கர வண்டி முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கொலைச் சம்பவம் ரத்மல்யாய மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.