கைத்தொலைபேசி பயன்பாட்டுக்கு அடிமையான சிறுவர்கள்: வெளியாகும் அதிர்ச்சித் தகவல்


கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதன் காரணமாக, சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சேனானி விஜேதுங்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொவிட்-19 காலப்பகுதியில் சமூக ரீதியாக ஒன்றுகூட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பாடசாலைக் கல்வி இணையவழி மூலமாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் சிறுவர்கள் தங்களையும் அறியாமல் கைத்தொலைபேசிகளை அதிகளவில் பயன்படுத்த பழகிக் கொண்டனர்.

தற்போது இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறான அடிமைப்பாடுகளின் விளைவாக, எமது கிளினிக்குகளில் சிறுவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானதன் காரணமாக மனநல பாதிப்புகளை எதிர்கொள்ளும் பதின்ம வயது சிறுவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவ்வாறான மனநல சிகிச்சைகளுக்காக கிளினிக்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும், இது சமூகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் ஒரு பாரிய பிரச்சினையாக மாறி வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.