பிரித்தானியாவைத் தாக்கும் ‘சண்ட்ரா’ புயல்: செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு


இந்த மாதத்தில் பிரித்தானியாவைத் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக ‘சண்ட்ரா’ (Chandra) உருவெடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு புயல்கள் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (27) ‘சண்ட்ரா’ புயல் தாக்கவுள்ளதாக பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை எச்சரிக்கை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பெரும் அலைகள் எழுந்து, அவை வீதிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை, தென்மேற்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 30 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழையும், உயரமான பகுதிகளில் 80 மில்லிமீட்டர் வரை மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலம் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகள் மற்றும் ஸ்கொட்லாந்தில் கனமழை பெய்யக்கூடும்; அதே நேரத்தில், மழை பனியாக மாறும் சாத்தியமும் உள்ளது.

மலைப்பகுதிகளில் 5 செ.மீ முதல் 20 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்பதால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.