உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் ; வெளியான விசேட அறிவிப்பு!


தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பாக மீளாய்வு செய்த பின்னர், அனைத்துத் தகவல்களையும் பரீட்சார்த்திகளுக்கு விரைவாகத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்காக நிறுவப்பட்டுள்ள பிரதான ஒருங்கிணைப்பு நிலையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.

அதேபோல், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் நாலாக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாடசாலைகளை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கும் திகதி குறித்தும் கவனம் செலுத்த நேரிடும் என்றும், தற்போது அது தொடர்பான சரியான திகதிகளைக் குறிப்பிடுவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு அமைய நேற்று (27), இன்று (28) மற்றும் நாளை (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த பாடங்களை, மோசமான வானிலை காரணமாக டிசம்பர் 7, 8, 9 ஆகிய திகதிகளில் நடத்தப் பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.