சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ; அவசர உதவிக்கு விசேட எண்!
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோசமான வானிலை தொடர்பான அனைத்து அவசரநிலைகளையும் 117 என்ற துரித இலக்கத்துக்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் வழங்க பாதுகாப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதகமான நிலைமைகள் நீடிப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
