பேருந்து பயணச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் - வெளியான தொலைபேசி இலக்கம்!
பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் மேல் மாகாணத்தில் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்தது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தவிடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அந்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவிக்கையில்,
பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயணச் சீட்டுக்களை பயணிக்கும் போது தம்வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
அத்துடன் பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்தவும் வேண்டும்.
அதேநேரம் நீங்கள் கேட்டும் நடத்துனர் உங்களுக்கான பயணச் சீட்டை வழங்கவில்லையாயின் 070 - 2860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.