பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற குழந்தையை வைத்து மிரட்டல் விடுத்த நபர்கள் கைது!


மல்லவெதிரவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ரூ.10 மில்லியன் கப்பம் கோரி, அவரும் அவரது குழந்தையும் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டிய இருவரை, நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜூன் 9ஆம் திகதி பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்திருந்தார். கப்பம் செலுத்தாவிட்டால் கொலை செய்வோம் என நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டதாக விசாரணையாளர் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட தம்பத்துரை பகுதியில் ஜூன் 17ஆம் திகதி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிக்கிய சந்தேகநபர்கள் 32 மற்றும் 46 வயதுடையவர்களாகும். அவர்கள் முறையே மட்டியகனே மற்றும் கொட்டுகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் படல்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ஏற்கனவே ரூ.2 மில்லியன் பெறப்பட்டதும், இந்த செயலில் ஈடுபடாத இரு பயங்கரவாதிகளின் பெயர்கள் பயமுறுத்த பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இக்குற்றம் மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட பொம்மை துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், புதிய மோட்டார் சைக்கிள், மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல கையடக்கத் தொலைபேசிகள், சிம் கார்டுகள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள், மற்றும் வாகன ஆவணங்கள் போன்ற பல பொருட்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.