பிறரின் பொதிகளை எடுத்துச் செல்ல வேண்டாம்; விமானப் பயணிகளுக்கு இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை!
விமானப் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின் போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களை கடத்துவதற்கு சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருட்களின் தன்மை குறித்து அறியாமல் பொதுமக்கள் பாரிய குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி பெருமளவிலான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பயணப் பைகளை உரிமையாளர்கள் சோதனை செய்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் முறைகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலவச விமானப் பயணச்சீட்டு வழங்குவதாகக் கூறி யாரேனும் வெளிநாடு செல்ல அழைத்தால், அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், தமக்குச் சொந்தமில்லாத பொதிகள், பயணப் பைகள் அல்லது பொருட்களை எந்தச் சூழ்நிலையிலும் எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
