நீதிமன்ற வீடியோக்களை அனுமதியின்றி பகிர்வதற்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு!


நீதிமன்ற விசாரணைகளின் நேரலை வீடியோக்களை அனுமதியின்றி பதிவு செய்து, அவற்றை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு எதிரான வழக்கு, தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டதால் தேவையற்ற விமர்சனங்கள் எழுந்ததாக தலைமை நீதிபதி சூர்யா காந்த் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், தலைமைப் பதிவாளரின் முன்அனுமதியின்றி நீதிமன்ற ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்வது, எடிட் செய்வது அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வது கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை பயன்படுத்தி பணம் திரட்டவோ அல்லது வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தவோ கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு ஊடகங்களின் வழக்கமான செய்தி சேகரிப்பு பணிகளுக்கு எந்தவித தடையையும் ஏற்படுத்தாது என்றும், பத்திரிகையாளர்கள் வழக்கம் போல் நீதிமன்றச் செய்திகளை சேகரிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த உத்தரவின் நகலை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.