ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியீடு..!
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் இன்று (28) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், நிலைமையை விரைவாக மதிப்பீடு செய்யுமாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளில் முழு முனைப்புடன் செயல்படுமாறும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி ஆகிய மாகாணங்களுக்கு நிலநடுக்கம் தொடர்பான அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
