உணவுப் பொருட்களின் விலை உயர்வு: அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை!


நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக குற்றஞ்சாட்டி, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வுக்கு அமைச்சரின் செயலற்ற தன்மையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் என குற்றம்சாட்டினார்.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைந்த விலையில் விற்பனையான பெரிய முட்டை தற்போது 46–47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கீரி சம்பா அரிசிச் சந்தையில் செயல்படும் முறைகேடான வணிகக் கும்பல்களை கட்டுப்படுத்த அமைச்சரால் முடியவில்லை என்றும், அமைச்சரின் கடமை குற்றவாளிகளை பிடிப்பது அல்ல; நுகர்வோர் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரிசி சந்தையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், சோளம் பயிரிடுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுவது எதிர்காலத்தில் அரிசித் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் மேலும் மோசமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போது முறைகேடான வணிக நடவடிக்கைகள் காரணமாக நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் செயலற்ற தன்மையும் காரணம் எனவும் ஹர்ஷன ருக்ஷான் குற்றம்சாட்டினார்.