இந்த ஆண்டு 2.5 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு!


2026 ஆம் ஆண்டில் 2.5 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பான நாடுகளில் அதிக ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 1,43,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் 92,590 பேர் ஆண்களும், 50,497 பேர் பெண்களும் ஆவர். மேலும், 73,623 பேர் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கும், 69,494 பேர் திறன் சாராத வேலைவாய்ப்புகளுக்கும் சென்றுள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்பும் இலக்கில் இதுவரை 7,873 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், தென் கொரியாவுக்கு 8,000 தொழிலாளர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் 4,794 பேர் ஏற்கனவே வேலைவாய்ப்புக்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

அத்துடன், 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.