கொழும்பில் இன்று முதல் நீர்வெட்டு!


தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (02) இரவு 8 மணி முதல் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை பாதுக்கை பகுதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன், அங்கு 24 மணிநேர நீர் வெட்டு அமல்படுத்தப்படும்.

நீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்கள் குறித்து அந்தந்தப் பகுதி நுகர்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருவதால், அவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த நீர் விநியோகக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாதுக்கை பகுதியில் இன்று (02) இரவு 8.00 மணி முதல் நாளை (03) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். 

அதன் பின்னர் அப்பகுதிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். 

மீண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி பாதுக்கைக்கான நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. 

ஹோமாகம பகுதியில் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். 

அந்தப் பகுதிக்கும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்னா பன்னில தெரிவித்தார். 

பெலன்வத்தை பகுதியில் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் 5 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அதன் பின்னர் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து நீர் விநியோகிக்கப்பட்டு, மீண்டும் 9 ஆம் திகதி அந்த வலயத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.