ஜனாதிபதி உட்பட அரச அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் - தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை!


தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் தான் மின்கட்டணம் உயர்வடைந்துள்ளது. மின்கட்டணத்தை மேலும் 50 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு புதிய நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன  என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வலுசக்தி துறையில் அரசாங்கம் பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. சூரிய மின்சக்தித் திட்டத்தை அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது சூரிய மின்சக்தித் திட்டத்தில் ஒரு அலகுக்கு 34 ரூபா அளவில் செலுத்தப்பட்டது, ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் தொகை 15 முதல் 19 ரூபாவாக குறைக்கப்பட்டது.

மின்சாரசபையின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்சாரசபையை கலைத்து அதன் பொறுப்பு மற்றும் கடமைகளை நான்கு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். எந்த நிறுவனங்கள், எந்த பணியை செய்கிறது என்பது சந்தேகத்துக்கிடமாகவே காணப்படுகிறது.

புதிய மின்சார சட்டத்துக்கமைய மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு எந்த நிறுவனத்துக்கும் அதிகாரமில்லை. ஆனால் திருத்தப் பணிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒருசில பகுதிகளில் மிகவும் சூட்சமமான முறையில் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது.

மின்கட்டண உயர்வு பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. மின்கட்டணத்தை மேலும் 50 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு புதிய நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.

தரமற்ற நிலக்கரி விவகாரத்துக்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி உட்பட அமைச்சரவை, மோசடியுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்.என்றார்.