எரிபொருள் வழங்கும் முறையில் நாளை முதல் மாற்றம்!


நாளை (19) முதல், வாகனப் பதிவு எண்களின் கடைசி இலக்கத்தின்படி, ஒற்றை-இரட்டை எண் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒற்றை மற்றும் இரட்டை எண்களின் அடிப்படையில் சுழற்சி முறையில் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த முறையின் கீழ், பூஜ்ஜியம் மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட வாகனப் பதிவுத் தகடுகள், இரட்டை எண்கள் கொண்ட திகதிகளில் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்படும்.

அதாவது, வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்ணில் வரும் திகதிகளில் வழங்கப்படும். 

அதேநேரம், வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண் கொண்ட வாகனங்கள், ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளில் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1, 3, 5, 7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்ணில் வரும் திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம், இன்று (19) முதல், QR குறியீட்டைக் (QR code) காண்பித்தால் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முன்னர் வழங்கப்பட்ட சலுகைகள் இனி செல்லாது என்று தலைவர் குமார் ராஜபக்ச கூறியுள்ளார்.

அவசர காலங்களில்கூட, குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“QR குறியீட்டில் சிக்கல்கள் இருந்தால், எரிபொருள் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு 1919 என்ற எண்ணை அழைத்து அவற்றைச் சரிசெய்துகொள்ளுங்கள்.

முன்னர் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கி சில சலுகைகளை வழங்கினோம், ஆனால் இனிமேல் QR அமைப்பு மூலமாக மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.