சந்தேகநபர்களைக் கைது செய்யும் விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு!
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) 3ஆம் பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, ஒருவரை கைது செய்வதற்கு முன், அவரின் பேச்சு அல்லது கருத்து மூலம்
- போரைத் தூண்டுகிறாரா?
- இன, மத, தேசிய அடிப்படையிலான வெறுப்பு அல்லது வன்முறையை தூண்டுகிறாரா?
என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், கைது செய்ய முன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்கு தகவல் அளித்து, எழுத்துப்பூர்வ அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,
- ஒருவரின் கருத்து காரணமாக மனவருத்தம் ஏற்பட்டாலோ
- அவமதிப்பு உணர்வு ஏற்பட்டாலோ
- தெய்வநிந்தனை குற்றச்சாட்டு இருந்தாலோ
அவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
