பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை!


இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா செலவிடப்படும். 

15 இலட்சம் ரூபா செலவை "அதிகம்" எனக் கூறிவிட்டு, 180 இலட்சம் ரூபா செலவை ஏற்க அரசாங்கம் தயாராவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மின்சார சபையை இரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கு அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தை அரசாங்கம் தன்னிச்சையாக முன்னெடுத்தால், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.