85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம்!


அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டால், அவர் 12 மாத காலத்துக்கு தடையின்றி கொடுப்பனவுகளைப் பெறுவார். 

அதன் பின்னர், அந்தப் பயனாளி அடுத்த 12 மாத சுழற்சிக்கும் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க வருடாந்த மீளாய்வு செய்யப்படுவது கட்டாயமாகும். இந்த மீளாய்வுக்காகத் தகவல்களைப் புதுப்பிக்கும் பணி 2025 நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

எவ்வாறிருப்பினும் சுமார் 85,000 பயனாளிகள் இதுவரை தங்களது தகவல்களைப் புதுப்பிக்கவில்லை.

அந்த வகையில் வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளனர். 

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை 2025 நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இருப்பினும், இதுவரை ஏழை பிரிவைச் சேர்ந்த 56,547 பயனாளிகளும், மிக ஏழை பிரிவைச் சேர்ந்த 28,608 பயனாளிகளும் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

இதற்கான புதிய காலக்கெடு கடந்த 20ஆம் திகதி வரை மீள புதுபிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்களது தகவல்களை இணையவழியூடாகவோ அல்லது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பதன் மூலமோ புதுப்பித்துக்கொள்ள முடியும். இது ஒரு பாரிய சிக்கலாகும். 

மக்கள் தங்கள் தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்காவிட்டால், அடுத்த கொடுப்பனவு சுழற்சியில் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள். 

நாம் பிரதேச செயலகங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக இதன் அவசரத்தை உணர்த்தியுள்ளோம், மேலும் இணையவழியூடாக தகவல்களைப் புதுப்பிப்பதை எளிதாக்க தனியார் தகவல் தொடர்பு மையங்களுக்கு சிறப்பு அனுமதியையும் வழங்கியுள்ளோம்.

இம்மையங்கள் மூலம் ஏற்கனவே கணிசமானளவு தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 இலட்சத்து 70 000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகள் இன்னும் புதுப்பித்தல் செயல்முறையைச் செய்யவில்லை. 

பயனாளிகள் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இந்த எண்ணிக்கையினரையும் எவ்வாறாவது உள்வாங்க நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் அவர்களைக் கைவிடப் போவதில்லை. 

பொதுமக்களுக்குச் செய்தியைச் கொண்டு சேர்க்க நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இன்னும் ஒரு தகவல் தொடர்பு இடைவெளிஇருப்பதை உணர முடிகிறது. 

இதற்கிடையில், தகுதி வாய்ந்த 16,800 விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்கு இல்லாத காரணத்தினால் நன்மைகளைப் பெறாமலுள்ளனர். 

இவர்களில் 8900 பேர் ஏழை பிரிவிலும், 4400 பேர் மிக ஏழை பிரிவிலும் அடங்குகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்களின் அதிகப்படியான எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த எண்ணிக்கை 4,655 ஆகும். 

நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் சுமார் 1000 பயனாளிகள் வங்கி கணக்குகளை ஆரம்பிக்காமலுள்ளனர்.

பயனாளிகள் வங்கி கணக்கை ஆரம்பிக்காமைக்கான காரணம் அவர்களிடம் தேசிய அடையாள அட்டை இன்மையாகும். 

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் வங்கி கணக்கைத் திறக்க முடியாது. 

ஒன்று அவர்களிடம் அடையாள அட்டை இல்லை, அல்லது அவர்களுக்கு நலன்புரி நன்மைகளைப் பெறுவதில் ஆர்வம் இல்லை. 

பயனாளிகளைத் தெரிவு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டதும், அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வங்கி கணக்கைத் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் பயனாளிகளுக்கு ஒரு கடிதத்தை வழங்கும். 

அவர்கள் அந்த கடிதத்துடன் வங்கிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்ட அரச வங்கிகளில் 'அஸ்வெசும' கணக்காக (பூச்சிய மீதி கணக்கு - Zero-balance account) அதனைத் திறக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் பயனாளிகள் வங்கி கணக்கு இன்றி இருந்தனர். 

எனினும் தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனால் இன்னும் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தாம் இந்த நன்மையைப் பெற தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறியாதுள்ளனர். 

அவர்களுக்கு நாம் கடிதங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளோம், ஆனால் செய்தி அவர்களைச் சென்றடையவில்லை என்றார்.