இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்! வெளியான தகவல்


இலங்கையைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் (Clerk) பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாடு காரணமாக, நாட்டில் மொத்தமாக 1.83 மில்லியன் பணியாளர்களின் தொழில்கள் எதிர்காலத்தில் ஆபத்தில் உள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் தற்போது பணிபுரியும் மக்களில் சுமார் 22.8 சதவீதம் பேர், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் வேலை இழக்கும் நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என கொள்கை ஆய்வுகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.