நுவரெலியாவில் காலநிலை மாற்றம்; 3.5°C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு
நுவரெலியாவின் சில பகுதிகளில் கடுமையான உறைபனி (frost) காணப்பட்டுள்ளதுடன், மிகக் குறைந்த வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்று (22) நுவரெலியாவில் 3.5°C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி நிலவி வருகின்றது.
இதன் காரணமாக, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, நுவரெலியா – கண்டி பிரதான வீதி, நுவரெலியா – பதுளை பிரதான வீதி, ஆகிய வீதிகளில் பார்வைத் திறன் கடுமையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாகன சாரதிகள் குறைந்த வேகத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக கிராமப்புற மக்களின் நாளாந்த வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் உறைபனி நிலவுவதால், பிரதான வீதிகளில் வாகனங்கள் வழுக்கும் அபாயம் அதிகம் காணப்படுகின்றது. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நுவரெலியாவில் காலை முதல் மாலை வரை வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் மற்றும் வெயில் நிலவுவதுடன், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரான காலநிலை தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
