சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது - சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
"நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பாரிய பொதுக் கூட்டம் நேற்று (10) களுத்துறை, மத்துகம நகரில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எமது நாட்டின் எழுத்தறிவு, பொருளாதார வளர்ச்சி, தாய்-சேய் இறப்பு விகிதக் குறைவு மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகிய அனைத்துக்கும் இலவசக் கல்வியே காரணமாகும். அன்று கன்னங்கர இலவசக் கல்வியைக் கொண்டுவர முயன்றபோது, 'தோட்டங்களில் தேங்காய் பறிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள்' எனப் பிரபு வர்க்கத்தினரும், பெரும் முதலாளிகளும் எதிர்த்தனர். அந்தத் தடைகளையெல்லாம் தாண்டித்தான் நமக்கு இலவசக் கல்வி கிடைத்தது. அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
கல்வியைப் புதுப்பிப்பது என்பது அதில் ஆபாசத்தைப் புகுத்துவது என்று அர்த்தமல்ல. இணையவழி கல்வியில் ஆபாசமான விடயங்களை அணுகுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது. இதற்கு எதிராக மக்கள் இன்று அணிதிரண்டுள்ளனர்.
தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப்போக்கை நாட்டின் தேசியக் கொள்கையாக மாற்ற முடியாது. சீர்திருத்தங்களை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது.
வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் 'ஸ்மார்ட் போர்ட்' (Smart Board), கணினி வசதிகள் கிடைத்தால் போதாது. 41 இலட்சம் மாணவர்களுக்கும் அந்த உரிமை கிடைக்க வேண்டும். பாலர்பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை 'ஸ்மார்ட்' மாணவர்களை உருவாக்கி, ஒரு 'ஸ்மார்ட் நாட்டை' (Smart Country) கட்டியெழுப்ப வேண்டும்.
நாடு முன்னேற வேண்டுமானால் STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் வரலாறும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
அரசின் மெத்தனப்போக்கு கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாங்கள் வெள்ளை அறிக்கை, பச்சை அறிக்கை கேட்டபோது, ஆளும் தரப்பினர் எங்களைப் பார்த்துப் பரிகசித்தனர். எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல், வெறும் 'Power Point Presentation' மூலம் கல்வியை மாற்ற முயற்சித்ததாலேயே இன்று கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது.
தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைச் சரளமாகப் பேசும் நிலையை உருவாக்க வேண்டும். அரசியலமைப்பில் சிவில் உரிமைகளைப் போலவே கல்வியையும், சுகாதாரத்தையும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.
இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்காக அடுத்த வார நடுப்பகுதியில் 'தேசிய ஒன்றியம்' ஒன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Tags:
இலங்கை செய்தி
