பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை - வெளியான அறிவிப்பு!
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் சூறாவளி அபாயத்தின் காரணமாக, மாகாண ஆளுநர்களின் உத்தரவுகளுக்கேற்ப வடமேல், கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய 2025 நவம்பர் 27 (வியாழன்) மற்றும் 28 (வெள்ளி) ஆகிய இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடுமுறைக்கான ஈடுசெய்யும் பாடசாலை தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தை பாதிக்கும் சூறாவளி அபாயம் மற்றும் தொடர்ந்த மோசமான காலநிலை காரணமாக 2025 நவம்பர் 27 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை முழுமையாக சீரடைந்த பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர விடுமுறை அறிவிப்புகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
— மாகாண கல்வி அதிகாரிகள்
