வியாபாரி விழுங்கிய 28 பக்கட் ஹெரோயின் ; சிறைச்சாலையில் மலம் கழிக்க வைத்து மீட்பு!


மட்டக்களப்பு, ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2,040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர், அதற்கு மேலதிகமாக வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது:-

ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சனிக்கிழமை ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமையை அடுத்து அன்றைய தினம் அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம் தன்னைக் கைது செய்யும் போது தன் வசம் இருந்த 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார் எனவும், இது தொடர்பாக பொலிஸாரிடமோ வேறு எவரிடமோ தாம் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அந்த நபரை சிறைச்சாலை மலசலகூடத்தில் மலம் கழிக்கச் செய்த போது மலத்துடன் வாயில் போட்டு விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட 1,960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 45 வயதுடைய அவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், இவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மீண்டும் இந்த வழக்குக்கு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.