இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழு ; விசாரணையில் செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்கள்!


சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட அறுவர் நேற்று (15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் 2 அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.

ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர்.

நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் தலைமறைவான காலட்டத்தில் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தி 4 நாள்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்த பின்னரே அவர் நேபாளம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. செல்வந்தியுடன் கைதான அவர் பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹேல்பத்தர பத்மேயின் சகா எனவும் தெரியவருகின்றது.

சம்பவத்தை அடுத்து செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில் அவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.