இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் லீ கியாங் உறுதி!
இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார்.
சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங்குடன் நேற்று (13) விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அதன்போதே அவர் பிரதமர் ஹரிணியிடம் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்குத் திடமான ஆதரவை வழங்குவதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய மீண்டும் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின்போது, பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்காகச் சீன அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டைத் தெரிவித்த பிரதமர், மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்திற்கான ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் முன்மொழிவுகளையும் வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதாரம், புத்தாக்கம், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் சீனாவின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் "வளமான தேசம் – அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.
வறுமையை ஒழித்தல், நிலையான அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல் , மற்றும் 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka திட்டம் உள்ளிட்ட செயல்திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய இலங்கையின் தேசிய முன்னுரிமைகளைச் சீனப் பிரதமர் லீ சியாங் அங்கீகரித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் அண்மையில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தி, நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக, Belt and Road முன்முயற்சியின் கீழ் மேலும் ஒத்துழைப்பை வரவேற்றதோடு, இலங்கையின் ஒரு முக்கிய அபிவிருத்திப் பங்காளராகச் சீனாவின் பங்கை எடுத்துரைத்தார்.
உயர்ந்த தரத்திலான Belt and Road முன்முயற்சியின் கீழ் சீன அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுத் தருவதாகச் சீனப் பிரதமர் லீ சியாங் உறுதி அளித்தார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், பீஜிங் பிரகடனத்தின் தொடர்ச்சியான ஆதரவை ஒரு செயல்பாட்டுத் தளமாக வெளிப்படுத்தினார். அத்துடன், பெண்களின் தலைமைத்துவம், அதிகாரமளித்தல், சம வாய்ப்பு மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.