நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை: 144 குடும்பங்கள் பாதிப்பு!


இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி ,மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.