கடவுச்சீட்டு வழங்கும் சேவைகளை விரிவுபடுத்த 186 அதிகாரிகள்!


கடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

முன்னர் தினமும் 1,200 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் 4,000 கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றார்.

சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், துறைக்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக அவர் கூறினார். அதன்படி, புதிய அதிகாரிகள் விரைவில் திணைக்களத்தில் உள்வாங்கப்படுவார்கள். குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது.

கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் தற்போது அதிக எண்ணிக்கையிலான புதிய கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றனர்.

மன்னார் அலுவலகத்தில் கடவுச்சீட்டு வழங்குவதும் 50 லிருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்காலத்தில் இ-பாஸ்போர்ட் திட்டத்தை செயல்படுத்த தேவையான கேள்வி விலைமனுக் கோரல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.