டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரிப்பு: கொழும்பிலுள்ள கால்வாய்கள், வடிகால்களை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சுற்றுச்சூழல் பொலிஸாரை பலப்படுத்தல் மற்றும் சமூக குழுக்களின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதன் ஊடாக முறையற்ற கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், இலங்கை காணிகள் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.