இலங்கை சிறுமிகளுக்கு AI தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து!


இலங்கையில் சம வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த பொருத்தமற்ற செயலை 13 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏன் தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ​​அதை ஒரு விளையாட்டாக செய்ததாகக் கூறுகிறார்கள்.

அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.

இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.