5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு வரிச் சுமை அதிகரிக்கும் அபாயம்!
இலங்கையில் 5 இலட்சம் ரூபாவை விட அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பாக நிலம், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்கு, நடைமுறையிலுள்ள வரி விதிகளின் கீழ் அதிக வரிச் சுமை ஏற்படக்கூடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்தாமல், 5 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை ரொக்கமாகச் செலுத்தி மேற்கொள்ளப்படும் வணிகச் செலவுகள், வரிக்கு உட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழிவுச் செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது வணிகத் தேவைக்காக 10 இலட்சம் ரூபாவை ரொக்கமாகச் செலுத்தினால், அந்தச் செலவை வரிக் கணக்கீட்டில் கழித்துக்கொள்ள முடியாது.
நிறுவனங்களுக்கு அதிக வரிச் சுமை
இதன் காரணமாக, குறித்த நிறுவனத்தின் வரிக்கு உட்பட்ட இலாபம் 10 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கும்.
இதன்படி, 30 சதவீத நிறுவன வருமான வரி விகிதத்திற்கு உட்பட்ட நிறுவனமொன்று, மேலதிகமாக 3 இலட்சம் ரூபா வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
நிலம் மற்றும் சொத்து விற்பனையிலும் பாதிப்பு!
நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபத்தைக் கணக்கிடும்போதும் இதே விதிமுறைகள் பொருந்தும் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணமாக, ஒருவர் 90 இலட்சம் ரூபாவுக்கு நிலமொன்றைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்தால், வழக்கமான வரிக் கணக்கீட்டின்படி 10 இலட்சம் ரூபா மட்டுமே இலாபமாகக் கருதப்படும்.
எனினும், நிலத்தைக் கொள்வனவு செய்தபோது நடைமுறையிலுள்ள கட்டண விதிமுறைகளை மீறி ரொக்கமாகப் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அந்த 90 இலட்சம் ரூபா கொள்வனவுச் செலவை வரிக் கணக்கீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
முழு விற்பனைத் தொகைக்கும் வரி விதிக்கப்படுமா?
இவ்வாறான சந்தர்ப்பத்தில், உண்மையான இலாபமான 10 இலட்சம் ரூபாவுக்குப் பதிலாக, விற்பனைத் தொகையான முழு ஒரு கோடி ரூபாவையும் அடிப்படையாகக் கொண்டு வரிக்கு உட்பட்ட ஆதாயம் கணக்கிடப்படக்கூடிய அபாயம் உள்ளதாக அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
முறையான நிதிச் சேவைகள் ஊடாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவித்தல், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வரி முறைக்கு வெளியே இடம்பெறும் நிதி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இத்தகைய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் பெரிய தொகையிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
