பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
