பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும் சந்தர்ப்பங்களில், மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு புதிய திட்டம்

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை குறைவதுடன், இடைவிலகல் அதிகரிப்பதும் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தேவையான பகுதிகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக முக்கிய நடவடிக்கைகள்

பாடசாலை மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக போசாக்குத் திட்டங்களை வலுப்படுத்துதல், பாடசாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

இதனுடன், அதிபர்களுக்கான இடமாற்றம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த முக்கிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (23) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட கல்வி உபகுழுக் கூட்டத்தின்போது இடம்பெற்றுள்ளது.